Saturday, April 17, 2010

காலத்தின் வாய்க்குள்

காலத்தின் வாய்க்குள்

முதல்முடிவு எதையும் காட்டாமல்
தொலைதூரத்தில் தெரியும்
உன் கண்களை கழற்றி எறி

சிலந்தியின் வாய்க்குள்
உனது விரல்கள்
காணாமல் போகும் காலங்கள்
கூடுகளில் இழைத்துக் கொண்டிருக்கும்
விரல்கள் வேண்டாம்

நத்தை நிறுத்திலான உனது பயணம்
எல்லைகள் தாண்டுவதில்லை
மலத்தை மிதித்து மிதித்தே
அழுக்கேறிப்போன கால்களால்
நிலையான சுவட்டை

உருவாக்க முடியாததால்
அதை வெட்டி வீசு

அணிந்து கொள்கிறாய்
துரோகங்களையும் அவமானங்களையும்
துணை தேடி தேடியே
சுய விலாசமிழந்தது
உன் இருப்பு

மாற்றான் முடைந்த பாயில்
உனது படுக்கை
புழுதியெங்கும் பதிந்து கிடக்கின்றன
பழைய சுவடுகள்
இதில் எங்கும் உறங்க வைத்திருக்கிறாய்
உனது பாதங்கள்

Monday, April 5, 2010

அலைவரிசை எண் 1

அலைவரிசை எண் 1

அந்தியின் கண்ணீரத் துளிகளை
ஆவியாக்கி அருந்துகிறது
சூரியனின் பின்புறநிழல்

விரைந்து கொண்டிருக்கும்
காற்றலைகளில் ஏதாவதொரு
அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது
இழவுச் செய்தி

ஈட்டமுடியா இழப்பின்
நாண்களிலிருந்து
வழிகிறது குருதியின் இசை

துயரங்களின் வரிசைகளைத் தாங்கிய
கண்ணிழந்த கடிதமென
அசைகிறது உன் நா

காலம் குலுக்கிய உண்டியலுக்குள்
சிறிதும் பெரிதுமாய்
காலடித் தடங்கள்

விலங்கு நீர்பரப்பில்
மிதந்து கொண்டிருக்கிறது
செதில்கள் பிடுங்கப்பட்ட நிலையில்
கண்கள்

Thursday, March 25, 2010

தேடுதல் குறித்தது...

நாமே
தொலைந்துபோன
திருவிழாக்களில்
யார் யாரையோ
தேடியலைகிறோம்.

Monday, March 15, 2010

மரணத்தின் விளையாட்டு

மரித்த தாயின் விழிகளை
பிரித்துப் பார்த்து
கண்ணாமூச்சி ஆட்டுவதாய்
சிரிக்கும்
முலை சப்பி
சலித்த மதலை - இளையபாரதி 

Saturday, February 27, 2010

எல்லாம் இயல்பாகவே .....

கடிகார முட்களில்
உறைகிறது காலம்
நீர் இன்றி கிடக்கிறது
குளம்
காற்று மட்டும்
அவ்வபோது நின்று
வீசுகிறது.......... உழவன்